சூரியன் மறைவு-சந்திரன் உதயம்; அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

சித்ரா பவுர்ணமியையொட்டி சூரியன் மறையும் காட்சியும் சந்திரன் உதயமாகும் காட்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததை கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

Update: 2022-04-16 14:31 GMT
கன்னியாகுமரி:

வருடம் தோறும் வரும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி இன்று மாலை 6 மணியளவில் கன்னியாகுமரி கடலில் சூரியன் மறைவதும் சந்திரன் உதயமாவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன.

பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்த இந்த அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரியில்  ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமானவர்கள் வந்து இந்த அபூர்வ காட்சியை கண்டு ரசித்தார்கள். 

இன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கமுள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள்  மறைந்தது. அப்போது கிழக்குப் பக்கமுள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானும் சந்திக்கும் இடத்திற்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் உதயமானது.

அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளி வெளிச்சத்தால் பளிச்சென்று மின்னியது. இந்த அரிய காட்சியை காண கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் மற்றும் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

சித்ரா பவுர்ணமியை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகமும், வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்