விழுப்புரம்: மின் ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை - பணம் கொள்ளை

விழுப்புரம் அருகே மின் ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை - பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-16 14:01 GMT
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாமதேவ் மகன் வேல்முருகன் (வயது 46). இவர் முண்டியம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 14-ந் தேதியன்று அதே பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வந்த நாமதேவ், உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதால் அங்கு வேல்முருகன் குடும்பத்தினர் தங்கியிருந்து வருகின்றனர். அதுபோல் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு நாமதேவ் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே படுத்து தூங்கிவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் வேல்முருகன், தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பகுதியில் உள்ள இரும்பு கிரில் கேட் பூட்டும் மற்றும் முன்பக்க மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். 

வேல்முருகன் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்