புதுச்சேரி-கடலூர் சாலையில் ஆபத்தான பள்ளம்
புதுச்சேரி-கடலூர் சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. விபத்துகளை தடுக்க தென்னக்கீற்றை நட்டு வைத்து பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
புதுவை -கடலூர் சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால், எப்போதும் வாகன நெரிசலாகவே காணப்படும். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதுதவிர சாலையில் அங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்து பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி அருகே சாலையின் நடுவே இருந்த ஆபத்தான பள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் யாரோ, அந்த பள்ளத்தில் மண் கொட்டி வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் தென்னை மர கீற்றுகளை நட்டு வைத்துள்ளனர்.
இந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அதனை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை பொதுப்பணித்துறை ஊழியர்கள், அந்த பள்ளத்தில் கற்கள், மண் கொட்டி மூடி சரி செய்தனர்.
புதுச்சேரி -விழுப்புரம், புதுச்சேரி- திண்டிவனம் சாலை, புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் கவனம் செலுத்துவது போல் போக்குவரத்து அதிகம் உள்ள புதுச்சேரி- கடலூர் சாலையையும் பேட்ஜ் ஒர்க் செய்வதை விடுத்து அரசு தரமான சாலை அமைக்க முன்வர வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.