செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான செடல் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருத்தேரில் வீதி உலா வந்தார். நிகழ்ச்சிக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் சேர்மன் ஆனந்தன், வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன், அ.தி.மு.க. மாநில துணைச் செயலாளர் குமுதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வீரப்பன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் செயலாளர் கமலஜோதி, பொருளாளர் வரதப்பன், உறுப்பினர் கலையரசி கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
நேற்று மாலை தேரடி உற்சவம் நடைபெற்றது. இன்று காலை மஞ்சள் நீராட்டு, இரவு 10 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. நிறைவாக வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி அளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.