மதுரை சித்திரை திருவிழா; கள்ளழகர் நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்
இந்த ஆண்டு சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த 5-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை,
சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் நாளை காலை வைகைஆற்றில் இறங்குகிறார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துசெல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துகழகத்தின் சார்பில் மதுரைக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.