குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா...!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலக புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து வேடம் போட்டு முத்தாரம்மனை தரிசம் செய்ய வருவார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தசரா திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மலை அணிந்து தங்கள் ஊரில் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து உள்ளது. இதனால் கோவில் பக்தர்கள் வழிபடுதற்கு இருந்த தடை நீங்கியது. இதனால் பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு, திருவிழா போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் இன்று வருஷாபிஷேக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் விமான அபிஷேகம், காலை 11 மணிக்குள் சங்காபிஷேகம், 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர்.