பா.ஜனதா-விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பயங்கர மோதல்-கல்வீச்சு

ெசன்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டனர். இதில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-04-14 22:06 GMT
பூந்தமல்லி,

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று காலை முதலே சென்னை கோயம்பேட்டில், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதற்காக அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கட்சி கொடியை நட்டு இருந்தனர்.

அதேபோல் பா.ஜ.க. தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால் அக்கட்சியினர் பா.ஜ.க. கொடி கம்பங்களையும் அங்கு நட்டு இருந்தனர். ஒரே நேரத்தில் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கு அதிகளவில் திரண்டு இருந்தனர்.

மோதல்-கல்வீச்சு

முதலில் அங்கு வந்த திருமாவளவன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் கீழே இறங்கி வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அங்கு நட்டு இருந்த பா.ஜ.க. கொடி கம்பம் கீழே சாய்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் பா.ஜ.க. கொடி கம்பத்தை வேண்டும் என்றே கீழே தள்ளி விட்டதாக கூறி அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன், பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் திருமாவளவன், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது.

இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களையும், தண்ணீர் பாட்டிலையும் வீசி பயங்கரமாக மோதிக்கொண்டனர். அத்துடன் அங்கு நட்டு இருந்த கட்சி கொடி கம்பங்களில் இருந்த கொடியை அகற்றி விட்டு, இரும்பு கம்பியாலும் தாக்க முயன்றனர்.

போர்க்களமானது

இதனால் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் கோயம்பேடு நூறடி சாலையில் கற்கள், செருப்புகள் சிதறி கிடந்தன. அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் தடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கோயம்பேடு நூறடி சாலையின் ஒரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மறு பக்கம் பா.ஜனதாவினரும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட இருகட்சியினரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

5 பேர் காயம்

இரு தரப்பினரும் கல் வீசி தாக்கி கொண்டதில் பா.ஜனதா பிரமுகர்கள் அரிகிருஷ்ணன், செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புதிய குமார், ரவி மற்றும் போலீஸ்காரர் தர்மராஜ் ஆகிய 5 பேருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட 5 பேரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியை ேசர்ந்த கராத்தே தியாகராஜன், காயத்ரி ரகுராம் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

போலீசில் புகார்

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனித்தனியாக ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகார் அளிக்க போலீஸ் நிலையம் வந்தபோது அங்கும் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

அதன்பிறகு போலீசார் அம்பேத்கர் சிலை முன்பு ஏராளமான இரும்பு தடுப்புகளை அமைத்து, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தவர்களை அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்