மின்சாரம் தாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பலி

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-14 20:14 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் துறைத்தோப்பு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று விழா நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இதற்காக நேற்று காலை பேனர் வைக்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேனரை(பிளக்ஸ் போர்டு) மேலே நிமிர்த்தியபோது அது மின் கம்பியில் உரசியது.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் தில்லைவிளாகம் இந்திரா நகரை சேர்ந்த சண்முகம் மகன் சோட்டா என்கிற சின்னத்துரை(32) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த பணியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன் கார்த்திகேயன்(25), பன்னீர்செல்வம் மகன் சபரிநாதன்(26), நாகராஜன் மகன் புண்ணியமூர்த்தி(20), செல்வராஜ் மகன் மனோஜ்(19) ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மின்சாரம் தாக்கி பலியான சின்னத்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணைச்செயலாளராக உள்ளார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி கமலி(25) தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

மேலும் செய்திகள்