மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண குவிந்த பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Update: 2022-04-14 03:11 GMT



மதுரை, 


மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரவழைத்த பூக்களால் மணமேடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது.

அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று இரவில் நடந்தது.

இதில் மீனாட்சியாக ஏலவாரி அருள்நம்பியும், சுவாமியாக அருணோஸ் சந்திரசேகரனும் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் திருக்கல்யாணத்திற்காக மாப்பிளை அழைப்பும் கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிறது. இதற்காக மண்டபம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வருவர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருள்வார். காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது. திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

மீனாட்சி திருக்கல்யாண ஏற்பாடுகள் குறித்து கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் கூறும் போது, “2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடக்கிறது.. அவர்களது எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளோம். 300 டன் வரை குளு, குளு ஏ.சி. வசதியும் செய்துள்ளோம். நாள் முழுவதும் பழைய கல்யாண மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளிப்பர். கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண்ணீர் பாட்டில், பிரசாத பை வழங்க உள்ளோம். பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன,” என்றார்.

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் எப்பொருட்களையும் (செல்போன் உட்பட) எடுத்து வர அனுமதியில்லை. திருக்கல்யாணம் முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியேற வேண்டும்.

மேலும் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இந்த விருந்துக்கு உணவு தயாரிக்கும் பணி நேற்று மதியம் தொடங்கியது. அப்போது பெண்கள் அதிக அளவில் அங்கு வந்து காய்கறிகள் நறுக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு மாப்பிளை அழைப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு மதுரை நகர் முழுவதும் மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

இதனை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காலை முதலே ஆண், பெண் பேதமின்றி திரண்டு வந்துள்ளனர்.  மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வை காண்பதற்காக பக்தர்கள் திரளாக கோவிலுக்குள் கூடியுள்ளனர்.  கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதற்காக அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.  வாகன போக்குவரத்தும் ஒழுங்குப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்