'சுப கிருது' தமிழ் புத்தாண்டு பிறந்தது - கோவில்களில் மக்கள் வழிபாடு
சித்திரை முதல் நாளான இன்று 'பிலவ' ஆண்டு விடைபெற்று 'சுப கிருது' புத்தாண்டு பிறந்தது.
சென்னை,
உலகின் முதல் மொழியாம் தமிழ், எல்லா விழாக்களையும் காரணங்களுடன்தான் கொண்டாட கற்றுக்கொடுத்து இருக்கிறது. அதன்படி சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக, சித்திரை திருநாளாக தமிழர்களின் கோலாகலமான கொண்டாட்டு வருகிறது. அந்த வகையில் சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சித்திரை மாதத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் மையப்புள்ளியில் வருகிறது. இது இளவேனிற் காலத்தின் தொடக்கம். இரவு குறைந்து பகல் நேரம் அதிகமாகும். இந்த காலத்தில் கொன்றை உள்ளிட்ட மரங்கள் பூத்துக்குலுங்கும். மரங்கள் புதிய கிளைகள் விட்டு வளர்ச்சி அடையும். தேனடைகளில் தேன் அதிகமாகும். மா மரங்கள் அதிக காய்களைத் தரும், பலாப்பழங்கள் காய்த்து தொங்கும், வாழை அறுவடைக்காலம் என்று இயற்கையும் வரவேற்கும் விழாவாக சித்திரை விழா அமைகிறது.
பகல் நேரம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுகிறது. அறிவியல் பூர்வமாகவும் சித்திரை மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாகவே உள்ளது. உலகமெங்கும் பருவகாலங்கள் 4 என்று பிரித்தபோது தமிழர்கள் கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என 6 பருவங்களாக பிரித்தனர்.
தமிழர்களுக்கு வசந்தகாலம் என்பது கிடையாது. இளவேனிற்காலம்தான் வசந்தகாலத்தின் தொடக்கமாக உள்ளது. இந்த இளவேனிற்காலத்தின் தொடக்கம் சித்திரை மாதமாகும். சித்திரை தொடங்கி வைகாசி வரையான இளவேனிற் காலத்தின் தொடக்க நாளை (சித்திரை 1) பல்வேறு வகைகளில் நாம் வரவேற்கிறோம்.
அந்தவகையில் இளவேனிற்காலத்தின் தொடக்க நாளான இன்று 'பிலவ' ஆண்டு விடைபெற்று 'சுப கிருது' புத்தாண்டு பிறந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, தமிழ் மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.