தமிழக கோவில்களில் திருட்டு போன ரூ.12 கோடி மதிப்புள்ள பழமையான 3 சாமி சிலைகள் மீட்பு

தமிழக கோவில்களில் திருட்டு போன ரூ.12 கோடி மதிப்புள்ள பழமையான சாமி சிலைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். புதுச்சேரியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த சிலைகளை பிரான்சுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-13 20:29 GMT
சென்னை,

புதுச்சேரி சப்ரெயின் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பழமையான ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி இது தொடர்பாக விசாரணை நடத்தி குறிப்பிட்ட சிலைகளை மீட்க உத்தரவிட்டார்.

ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்டு அசோக்நடராஜன் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசில் துணை சூப்பிரண்டுகள் மோகன், முத்துராஜா, இன்ஸ்பெக்டர்கள் வசந்தி, அம்மு ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்தனர். குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக சோதனை போட்டனர். அந்த வீட்டில் ஜோசப் கொலம்பானி என்பவர் வசித்து வந்தார். அவர் தற்போது காலமாகி விட்டதாக தெரிகிறது. அவர் தனது கட்டுப்பாட்டில் நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை குறிப்பிட்ட வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

3 சிலைகள் மீட்பு

போலீசார் நடத்திய சோதனையில் குறிப்பிட்ட 3 சிலைகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டது. தற்போது அந்த வீட்டில் ஜோசப்கொலம்பானியின் பேரன் மற்றும் உறவினர்கள் வசிக்கிறார்கள்.

அவர்களிடம் விசாரித்தபோது, அந்த சிலைகளை ஜோசப்கொலம்பானி பத்திரமாக வைத்து பராமரித்து வந்ததாகவும், அந்த சிலைகள் பற்றி வேறு விஷயம் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தனர். மேலும் அந்த சிலைகளுக்குரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

மேலும் அந்த சிலைகளை ஆய்வு செய்ததில், அவை தமிழகத்தில் ஏதாவது ஒரு கோவிலில் திருட்டு போனதாக இருக்கக்கூடும் என்று போலீசார் நம்பினார்கள். எனவே அந்த 3 சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்து சென்னை கொண்டு வந்தனர்.

ரூ.12 கோடி மதிப்பு

மேலும் அந்த 3 சாமி சிலைகளின் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என்றும், அவற்றை ஏற்கனவே ஒரு முறை பிரான்சு நாட்டுக்கு கடத்தி செல்ல முயற்சி நடந்துள்ளது என்றும், எனவே அவற்றை பிரான்சு நாட்டுக்கு கடத்தி செல்ல முயற்சிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த சிலைகள் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை ஆகும். சோழ மன்னர்கள் ஆண்ட காலத்திற்கும், விஜயநகர பேரரசு ஆட்சிக்கும் இடைப்பட்ட காலத்திய சிலைகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

1980-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டு இருக்க வேண்டும் என்றும், எந்த கோவிலில் அந்த சிலைகள் திருட்டு போனது என்பது பற்றியும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை அசோக்நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தலைமை அலுவலகத்தில் அந்த சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்