கரூரில் சாலை அமைத்ததாக கூறி ரூ.3 கோடி ஊழல்: மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம்
கரூரில் சாலை அமைத்ததாக கூறி ரூ.3 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர்,
தனியார் ஒப்பந்த நிறுவனம்
கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை உள்ளிட்ட 4 சாலைகள் போடப்படாமலேயே சாலை அமைத்ததாக கூறி தனியார் ஒப்பந்த நிறுவனம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் துணையுடன் ரூ.3 கோடிக்கு மேல் ஊழல் செய்து இருப்பதாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சரமாரியாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்திடம் கடந்த 5-ந் தேதி புகார் மனு அளித்தார்.
அதனை தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்ட பகுதிகளில் தடயங்களை அழிக்கும் வகையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டரின் நேர்முக உதவியாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் அ.தி.மு.க.வினர் கடந்த 6, 7-ந் தேதிகளில் புகார் அளித்தனர். மேலும் கடந்த 8-ந் தேதி தலைமை செயலாளரிடம் விஜயபாஸ்கர் புகார் அளித்தார்.
பணியிடை நீக்கம்
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனைதொடர்ந்து, திருப்பூர் மற்றும் சேலம் கண்காணிப்பு பொறியாளர்கள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கரூர் கோட்டப்பொறியாளர் ஆர்.பி.சத்தியபாமா, கரூர் உதவி கோட்டப்பொறியாளர் ஆர்.கண்ணன், கரூர் இளநிலை பொறியாளர் பூபாலசிங், கரூர் கோட்டக் கணக்கர் கே.பெரியசாமி, ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த ஈரோடு கோட்டப் பொறியாளர் வெ.வெ.நித்திலன், கரூர் உதவி கோட்டப் பொறியாளர் முகமது ரபீக், கரூர் உதவிப் பொறியாளர் தீபிகா, ஈரோடு கோட்டக் கணக்கர் சத்யா ஆகிய 8 பேர் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் இந்த முறைகேடு புகார் தொடர்பாக கரூர் உதவிப் பொறியாளர் கார்த்திக் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தீவிர விசாரணை
பணி நீக்கம் செய்யப்பட்ட 9 பேரும் இதுபோன்று முறைகேடு செயல்களில் இதற்கு முன்பாக ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும், இதுபோன்று அவர்கள் முன்பு பணியாற்றிய இடங்களில் முறைகேடு செய்துள்ளனரா? என்பது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அது குறித்தான ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.