புதுச்சேரி கடற்கரை திருவிழா இன்று தொடக்கம்
புதுச்சேரி கடற்கரை திருவிழாவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.;
புதுச்சேரி,
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் அதிக அளவில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தமிழ் புத்தாண்டையொட்டி 13-ந்தேதி(இன்று) முதல் 16-ந்தேதி வரை ‘புதுச்சேரி கடற்கரை திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவின் 4 நாட்களிலும் பல்வேறு இசை, நடன நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளது.
இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரி கடற்கரை திருவிழாவை தொடங்கி வைத்தனர்.