திருப்பத்தூர்: மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்துக் கொலை
திருப்பத்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (40) பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா தேவி (35). இருவர்களுக்கு கிருபாகரன் (15) யுவராஜ் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆதியூரில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு பெருமாள் மற்றும் துர்க்கா தேவி இருவரும் சென்றனர். அப்போது கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமுற்ற பெருமாள் திடீரென வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடப்பாறையை எடுத்து துர்கா தேவியின் தலையின் மீது பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த துர்கா தேவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெருமாள் வாக்குமூலத்தில் கூறியதாவது:
மனைவி துர்கா தேவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், அதுபோல் நேற்று நடைபெற்ற தகராறின் போது ஆத்திரமடைந்து அருகிலிருந்த கடப்பாறையை துர்கா தேவி தலையில் எடுத்து அடித்ததாகவும், அதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்ததார், என கூறியுள்ளார். மனைவியை சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.