பள்ளிக்குள் புகுந்து மாணவன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட ஆசிரியரை மிரட்டிய வாலிபர் கைது

பள்ளிக்குள் புகுந்து மாணவன் தாக்கப்பட்டார். இதை தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-12 13:34 GMT
புதுச்சேரி
பள்ளிக்குள் புகுந்து மாணவன் தாக்கப்பட்டார். இதை தட்டிக்கேட்ட ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

10-ம் வகுப்பு மாணவன்

கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் தற்போது முதலியார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் விஷ்வா (வயது 15) சுப்பையா நகர் அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். 
அன்பழகன் கோரிமேடு அருகில் உள்ள தமிழக பகுதியான ஸ்ரீராம் நகரில் வசித்தபோது விஷ்வாவுக்கு அமீது அப்துல் காதர் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

ஊர் சுற்றினார்கள்

அமீது அப்துல் காதர் பள்ளிக்கு செல்லும் விஷ்வாவை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றியுள்ளார். அதன் காரணமாக அன்பழகன் அங்கிருந்து முதலியார்பேட்டைக்கு வந்து குடியேறினார். மேலும் தனது மகனை தினமும் ஆட்டோவிலேயே பள்ளிக்கு கொண்டுசென்று விட்டு, வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பழகன் தனது மகன் விஷ்வாவை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளார். அவர் சென்றதை மறைந்திருந்து பார்த்த அமீது அப்துல்காதர், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விஷ்வாவை அழைத்து சென்றார். 

தாக்குதல்- மிரட்டல்

ஆனால் அமீது அப்துல் காதரை விட்டுவிட்டு விஷ்வா மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பள்ளிக்குள் புகுந்து விஷ்வாவை தாக்கி, தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதை தட்டிக்கேட்ட ஆசிரியர்களையும் அவர் மிரட்டினார்.
இது குறித்து கோரிமேடு போலீசில் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீது அப்துல்காதரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்