போலீஸ் மீது தாக்குதல் தொடர்கிறது: போலீஸ்காரரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி
கோட்டூர்புரத்தில் போதை நபரை பிடிக்க சென்ற போலீஸ்காரர் கீழே பிடித்து தள்ளப்பட்டார். அவரை பீர்பாட்டிலால் தாக்கவும் முயற்சி நடந்தது.;
சென்னை,
சென்னை கோட்டூர்புரம், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, மேற்கு கால்வாய் சாலையை சேர்ந்தவர் விஜயராஜ்(வயது 25). இவர் போதைக்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த விஜயராஜ், அந்த பகுதியில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து பியூஸ் கேரியரை பிடுங்கி, மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. மக்கள் அவதிப்பட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கோட்டூர்புரம் போலீஸ் நிலைய ரோந்து குழுவைச் சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் அங்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து தகராறில் ஈடுபட்ட விஜயராஜிடம் பியூஸ் கேரியரை கேட்டார். அவர் கொடுக்க மறுத்து, தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
பின்னர் வேல்முருகனை பிடித்து கீழே தள்ளி, அவரை கொல்ல பார்த்துள்ளார். தனது கையில் இருந்த பீர்பாட்டிலால் வேல்முருகனை, விஜயராஜ் குத்தி கொல்ல முற்பட்டார். பொதுமக்கள் உதவியுடன், விஜயராஜை பிடித்து கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். குடிபோதையால் ரகளையில் ஈடுபட்ட விஜயராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பீயூஸ் கேரியரை வாங்கி மீண்டும் போலீசார் மின் இணைப்பு கொடுத்தனர்.
போதை ஆசாமிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது. மயிலாப்பூரில் போதை ஆசாமியால் துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.