அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை

அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2022-04-11 23:04 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகியவற்றின் மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

இளங்கோவன் (அரவக்குறிச்சி, தி.மு.க.):- அரவக்குறிச்சியில் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் சில இடங்கள் அதில் விடுபட்டுள்ளன. அவற்றை இணைக்க வேண்டும். அங்கு விளையும் முருங்கைக்காய் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே அவற்றை சேமித்து வைக்க குளிர்பதனக் கிடங்கு அமைத்துத்தரவேண்டும்.

அரவக்குறிச்சி தொகுதி பெரிய சட்டமன்ற தொகுதியாகும். இதுபோன்றவற்றை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.3 கோடியில் இருந்து உயர்த்தித்தர வேண்டும்.

பணிப்பாதுகாப்பு

நாகைமாலி (கீழ்வேளூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு்):- நமது மாநிலத்தில் உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள் மண், பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றை சார்ந்ததாக இருக்க வேண்டும். மத்திய அரசின் ஒற்றைவாத அரசியலுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருவதை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் 2 ஆயிரம் சுயநிதிக்கல்லூரிகளும், 251 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்குகின்றன. அங்கு ஆசிரியர் உள்பட பல்வேறு பணிகளில் 2 லட்சம் பேருக்கு மேலானோர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு இல்லை. இ.பி.எப். மறுக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

எனவே அவர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் அங்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

பாராட்டுக்குரிய தீர்மானம்

ஜவாஹிருல்லா (பாபநாசம், மனிதநேய மக்கள் கட்சி) :- பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்காக குழு, செயலிகள் அமைத்து 1.88 லட்சம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திருப்பது பாராட்டுக்கு உரியது. நீட்டும், கியூட்டும் (நுழைவுத் தேர்வுகள்) நம்மை தீட்டு என்று ஒதுக்குகின்றன. எனவே சட்டசபையில் கியூட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது.

மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகம், தென்மாவட்ட மாணவர்கள், மக்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. உயர் கல்வியில் படிப்பில் தேசிய அளவிலான கொள்கைகள், மாநில அரசுகளின் உரிமையை பறிக்கின்றன. அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் அமலாக்க முகவையாகத்தான் மாநிலங்களை மத்திய அரசு பயன்படுத்த முயற்சிக்கிறது.

அரசு கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரே வேந்தராக செயல்பட வேண்டும்.

பாலிடெக்னிக் மாணவிகள்

ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம், அ.தி.மு.க.) :- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி என்று கூறி 13 ஆண்டுகளாக பணியாற்றிய 135 தொழில்நுட்ப மற்றும் பகுதிநேர பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் ரூ.10.50 கோடி சம்பளம் கொடுக்கும் அந்த பல்கலைக்கழகம், அவர்களுக்கு வழங்கி வந்த சம்பளம் ரூ.11 லட்சம்தான். எனவே அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கூறியிருக்கிறீர்கள். அதை வரவேற்கிறோம். ஆனால் 6 லட்சம் மாணவிகளுக்கு அந்த நிதியை வழங்குவதாக கூறினீர்கள். ஆனால் 2 லட்சம் மாணவிகள்தான் உயர் கல்வியில் சேருகிறார்கள். அந்த திட்டத்தை ஆதிதிராவிடர், பட்டியல் இன மாணவிகளுக்கும், பிறமலைக்கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:- அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் அனைத்து மாணவிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 2 லட்சம் என்பதெல்லாம் தவறு. 6 லட்சம் மாணவிகள் இதில் பயனடைவர்.

அரசுக்கு சிக்கல்

ராஜன் செல்லப்பா:- கல்விக்கட்டண உயர்வு, தேர்வு கட்டண உயர்வு, வினாத்தாள் கசிதல், பள்ளி சுற்றுச்சுவர் இடிதல், பள்ளி பஸ் விபத்துகள், கழிவறை இல்லாமை, கழிவறையை மாணவர்கள், ஆசிரியர்கள் சுத்தம் செய்யும் அவல நிலைமை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாத நிலை, ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் நிலைமை, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் தூங்கும் நிலைமை, மாணவர்களின் பஸ் படிக்கட்டு பயணம், மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நிலையை மாற்ற வேண்டும்.

பள்ளிகளில் கழிவறைகளை பராமரிக்க தனி குழுவை அமைக்க வேண்டும். அதற்கு மாணவர்களை பயன்படுத்தக்கூடாது. நீங்கள் அளித்த வாக்குறுதிகளான, நீட் தேர்வு, மேகதாது அணையில் கர்நாடகத்தின் ஆதிக்கம், 7 பேர் விடுதலை, குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், முல்லைப்பெரியாறு அணையில் உள்ள 15 மரங்கள், தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றில் அரசுக்கு சில சிக்கல்கள் உள்ளன என்றே நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்