ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுச்சேரி வாணரப்பேட்டை சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஜெயநாதன் மகன் பன்னீர்செல்வநாதன் (வயது 22). இவர் வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பாட்டி தனம் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் பன்னீர்செல்வநாதன், கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை அவர் வில்லியனூர் அருகே பாண்டியன் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. உடனே அவர் மோட்டார் சைக்கிளை தண்டவாளம் அருகில் நிறுத்திவிட்டு திடீரென ரெயில் முன் பாய்ந்தார். ரெயில் மோதிய வேகத்தில் உடல் சிதறி பன்னீர்செல்வநாதன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.