விளைபொருட்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம்
கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்த விளைபொருட்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்த விளைபொருட்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருக்கனூரை அடுத்த கூனிச்சம்பட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த புதுச்சேரி விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தங்கள் வயலில் அறுவடை செய்த விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது மணிலா, உளுந்து, காராமணி ஆகியவை அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. அதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனை செய்த விவசாயிகள், தங்களுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யவேண்டும் என்று இன்று மாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்காதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுபற்றி அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணம் பட்டுவாடா
அப்போது, வியாபாரி களிடம் பேசி, உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். அதன்பேரில் விவசாயிகளுக்கு ரொக்க பணத்திற்கு பதில் காசோலையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலையில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. அதன்பின் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.