ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்ற போது துணிகரம்: பேராசிரியையிடம் செயின் பறித்த 3 பேர் கைது

தஞ்சையில் பேராசிரியையிடம் செயின் பறித்த 3 பேரை காரைக்காலில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்

Update: 2022-04-11 15:44 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் கோமதி (வயது 41). இவர் பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து, ஸ்கூட்டரில் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார்.

மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென கோமதியின் ஸ்கூட்டரை தள்ளி விட்டதில் அவர் கீழே விழுந்தார். உடனே அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து படுகாயமடைந்த கோமதி கொடுத்த புகாரின்பேரில், தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் ஏட்டுகள் உமாசங்கர், ராஜேஷ், போலீஸ்காரர்கள் அருண்மொழிவர்மன், நவீன், அழகுசுந்தரம், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான மோட்டார்சைக்கிளில் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த ஜவகர் (21), நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (22), ராஜசேகர் (24), ஆகிய மூவரும் கோமதியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துச்சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து காரைக்காலில் பதுங்கி இருந்த 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு பைக்குகள், 12 பவுன் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்