ஈரோட்டில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஈரோட்டில், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-11 15:08 GMT
ஈரோடு:

ஈரோடு மாவட்டம், திண்டல் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 65). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஞானசேகரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந்தேதி ஞானசேகரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை காணவில்லை. அதை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஞானசேகரன் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும், ரிசிவர் பாக்சையும் மர்மநபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் மற்றும் மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்