சொத்துவரி உயர்வை கண்டித்து நகர் மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க வினர் வெளிநடப்பு...!

எடப்பாடி நகர் மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-04-11 09:15 GMT
எடப்பாடி ,

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரமன்ற தலைவர் டி.எம்.எஸ் பாஷா தலைமையில் நகர் மன்ற கூட்டம்  இன்று காலை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து நகர் மன்ற அலுவலர்கள் சொத்து வரி உயர்வு குறித்து விவரத்தினை வாசித்தனர்.

அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும்  என்று அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது நகர் மன்ற தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷமிட்டனர். இதனையடுத்து நகர் மன்ற உறுப்பினர் முருகன் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இது தொடர்பாக நகர் மன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம் முருகன் கூறுகையில்,

நெசவு தொழிலாளிகள் நிறைந்த எடப்பாடி பகுதி பொதுமக்கள் கொரோனா பெரும் தொற்று காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். 

இந்த நிலையில் தற்போது திமுக அரசு கொண்டு வந்த சொத்து வரி உயர்வு எழை எளிய மக்களை மேலும் பாதிக்கம் வகையில் உள்ளது. எனவே அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வெளிநடப்பு செய்து உள்ளோம்.

மேலும் எங்களின் எதிர்பபை பதிவு செய்யவே கருப்பு சட்டை அணிந்து வந்தோம் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்