பிரசித்தி பெற்ற 8 கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரிக்கும் திட்டம் - சேகர்பாபு தொடங்கிவைத்தார்

பிரசித்தி பெற்ற 8 கோவில்களில் திருநீறு, குங்குமம் தயாரித்து பிறகோவில்களுக்கு வழங்கும் திட்டத்தை சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.

Update: 2022-04-10 21:21 GMT
சென்னை,

பழனி முருகன், திருச்செந்தூர் முருகன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆகிய 4 கோவில்களில் நவீன எந்திரங்கள் மூலம் தரமான விபூதியும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பண்ணாரி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களில் நவீன எந்திரங்கள் மூலம் தரமான குங்குமமும் தயார் செய்யப்பட்டு பிற திருக்கோவிலுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் தொடங்கி வைத்தனர். காணொலி காட்சி வழியாக பிற கோவில்களின் நிர்வாக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிற கோவில்களுக்கு...

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கடந்த மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் எண்ணிக்கை 112. இவ்வறிவுப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். அதன்படி, 1691 உட்பணிகள் மேற்கொண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்கும பிரசாதம் வழங்குவதற்காக 8 கோவில்களில் தயாரித்து, பிற கோவில்களுக்கு வழங்கிட ரூ.3 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம்.

அந்த அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமம் ஒரே சீராக வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் திருநீறு மற்றும் குங்குமம் பிரித்து அனுப்பப்படும் பணியை மேற்கொள்ளுமாறு மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.10 கோடியில் பணிகள்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், ராஜகோபுரம், பரிவாரசன்னதிகள், மூலவர் சன்னதி, தெப்பக்குளம், அன்னதான மண்டபம், முடிக்காணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி போன்ற பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. குன்றத்தூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அதற்கான வாகனங்கள் நிறுத்துமிடம், பாதுகாப்பு வசதிகள், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்