ஈரோடு: வழிப்பறி கொள்ளைக்கு துணைபோன 15 வயது பள்ளி மாணவன் கைது..!
பெருந்துறையில் ஜீஸ் வியாபாரம் செய்யும் வட மாநில இளைஞரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
உத்தரப்பிரதேச மாநிலம், ராஜ்பூரைச் சேர்ந்தவர் சோட்கோ (26). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்து தள்ளு வண்டியில் ஆரஞ்சு பழ ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல் ஜீஸ் விற்று கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த இருவர் ஜூஸ் குடிப்பது போல் நடித்து சோட்கோவின் செல்போனை பறித்து கொண்டு சென்றனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சோட்கோ திருடன்! திருடன்! என்று சத்தம் போட்டுள்ளார். ஜூஸ் வியாபாரியின் சத்தத்தை அப்பகுதி வழியே பைக்கில் வந்தவர்கள் சிறிதும் தாமதிக்காமல் வழிப்பறி கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்று, சிறிது தூரத்திற்குள் அவர்களை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில் பிடிபட்ட இரண்டு பேரும் ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் வேலுமணி (18) மற்றும் மற்றொருவர் 15 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
இதில்,வேலுமணி திண்டல் பகுதியில் உள்ள லேத் பட்டரையில் வேலை செய்பவன் என்றும், அவனுக்கு வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் துணையாக வந்த சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் கோர்டில் அவர்களை ஆஜர் படுத்தினர். மேற்படி வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் சபினா, வழிப்பறி கொள்ளை வழக்கில் கைதான சிறுவனை கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் (கூர்நோக்கு இல்லம்) வைக்கவும், இந்த குற்றச் செயலில் முதன்மையாக செயல்பட்ட வேலுமணியை கோவை மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.