உள்துறை மந்திரி அமித்ஷா 24 ந் தேதி புதுச்சேரி வருகை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுச்சேரி வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2022-04-09 13:44 GMT
புதுச்சேரி
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுச்சேரி வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

நடைபயிற்சி

உலக சுகாதார தினத்தையொட்டி இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி கிளை சார்பில் தொடர் நடைபயிற்சி (வால்க்கத்தான்) நடந்தது. இதனை கவர்னர் மாளிகை முன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
உடல் நலத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல்நலம் என்ற அடிப்படையின் மேல்தான் சாதனை என்ற கட்டிடத்தை எழுப்ப முடியும். அதனால் அனைவரும் காலை எழுந்தவுடன் உடல்நலத்தை பேணிக்காப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி இதற்காக யோகா செய்யவேண்டும் என்பது எனது கருத்து. உலக சுகாதார தினத்திலிருந்து தொடர்ந்து 75 நாட்கள் யோகா பயிற்சி செய்யவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அதனை தொடங்கி வைத்தார். யோகா உடல் நலத்தைப்போல் மனநலத்தை காப்பதாக அமைகிறது.

மனக்கட்டுப்பாடு

உடல் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும். மனம் கட்டுப்பாடாக இருக்கவேண்டும். உடல் நலத்தை பேணுவது என்பது உணவு முறையை உள்ளடக்கியது. அனைவரும் உணவு முறையிலும் கவனமாக இருக்கவேண்டும். உடல் பயிற்சியை போலவே உணவு பயிற்சியும் முக்கியம்.
சிறுதானிய வகைகளில் அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் உள்ளன. அதனால்தான் மத்திய அரசு சிறுதானிய ஆண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளது. உடல் நலமும், மன நலமும் சீராக இருந்தால் நாம் செயல்படுவதற்கான சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். உடல் நலத்தை பாதுகாப்பதுபோலவே இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமித்ஷா வருகை

டெல்லியில் பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இருவரும் புதுவை மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். புதுவை வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 24-ந்தேதி புதுச்சேரி வருகிறார். அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். டெல்லியில் நிதி மந்திரியையும் சந்தித்துள்ளேன். இதுதொடர்பாக முதல்-அமைச்சருடனும் ஆலோசித்துள்ளேன்.

புதுவைக்கு திட்டங்கள் 

புதுவை மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டுவரவும், நிதியை பெறவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்த சந்திப்பு பயனுள்ளதாக அடைந்தது. இதன்மூலம் புதுவைக்கு தேவையான பல திட்டங்கள் வர உள்ளன.
கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. புதுவை மக்களின் ஒத்துழைப்பால் இந்த நிலை உருவாகியுள்ளது.  மக்களின் தொடர் முயற்சியாலும், பாதுகாப்பு நடவடிக்கையாலும் இத்தகைய நிலை உருவாகியுள்ளது. இது தொடர வேண்டும்.
இதற்காக தனிமனித இடைவெளி, கைகளை கழுவுவது, முகவசம் அணிவது போன்றவற்றை இன்னும் சில நாட்களுக்கு தொடர்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நடைபயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

மேலும் செய்திகள்