இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் ஆகம விதிகளின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சேகர்பாபு
திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கோவில்களில் திருப்பணி நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான ஜி. கோவில்பட்டி அடுத்த மங்களப்புள்ளி, மங்களவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோவில் திருப்பணிகள் நடைபெறுவதை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். இக்கோவிலில் சுற்றுச்சுவர் கோவில் முகப்பு போன்ற கூடுதல் திருப்பணிகள் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆகம விதிப்படி திருப்பணி
தொடர்ந்து தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக நிதி ஒதுக்கீட்டினை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 வருடங்களுக்கு மேல் ஆன கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு என ரூ 100 கோடி நிதி நடப்பு நிதி ஆண்டில் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் போடப்பட்டுள்ளது . தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பழனியில் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
கோவில் சொத்துகளை மீட்டு சாதனை
மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட சுவாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்க்கப்பட்டு உள்ளது . மேலும் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படவுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோவில்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் அனைவருக்கும் சமம். தனியார் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.