தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை

வில்லியனூரில் தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டார்

Update: 2022-04-08 17:51 GMT
வில்லியனூரில் தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டார்.
முதியவர் கொலை
வில்லியனூர் ஆரியபாளையம் ஒத்தவாடை பைபாஸ் சாலையோரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள், வில்லியனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு கோதண்டராமன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர்.
போலீசார் விசாரணை
கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவரின் அருகில் ரத்தக்கறை படிந்த கல் மற்றும் செருப்பு கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு சாலையோரத்தில் படுத்திருந்த அவரை மர்மநபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இறந்த முதியவர் யார்? என அடையாளம் காணவும், கொலையாளிகளை கண்டுபிடிக்கவும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 
தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்