கொலை செய்யப்பட்ட முதியவர் யார் என தெரியாமல் போலீசார் திணறல்
கிருமாம்பாக்கம் அருகே முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகியும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவிலில் கடந்த 31-ந்தேதி சாலையோரம் தூங்கி கொண்டிருந்த முதியவர் உள்பட 2 பேரை மர்மநபர் ஒருவர் கல்லால் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்றொருவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வெறி தாக்குதல் நடத்திய குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற சைக்கோ வாலிபரை கைது செய்தனர்.
ஆனால் கொலை செய்யப்பட்ட முதியவர் யார் என அடையாளம் தெரியவில்லை. கொலை நடந்து ஒரு வாரத்துக்குமேல் ஆகியும் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது தொடர்பாக, கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் மூலமாக தகவல் தெரிவித்து, முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.