அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.8½ கோடி முறைகேடு

அதிகாரிகள் உதவியுடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.8 கோடியே 58 லட்சம் முறைகேடு வழக்கில் 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2022-04-07 20:54 GMT
சென்னை,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் கடந்த 4-ந்தேதி வழக்குப்பதிவு செய்தார். அவரது தலைமையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தினார்கள்.

இதில், எந்தவித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.8 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் அதிகாரிகள் உதவியுடன் நெல் விற்பனை செய்யப்பட்டிருப்பதும், இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த சிவா டிரேடர்ஸ் உரிமையாளர் என்.சிவகுமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன், ரஞ் சித் குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகாரிகள் குறித்து விசாரணை

மேலும் திருவண்ணாமலை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.கே.படவேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் இதே பாணியில் ரூ.57.82 லட்சம் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்