தமிழ் வேத மந்திரங்கள் முழங்க நடந்த திருமணம்
காரைகாலில் தமிழ் மந்திரங்கள் முழங்க நடந்த திருமணத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள். ஆனால், திருமணம் நடப்பது என்னவோ பூமியில்தான். அண்மைக் காலமாக நடுக்கடலில், தண்ணீருக்கு அடியில், ஆம்புலன்சில், ரெயிலில், ஆகாயத்தில், ஆன்லைனில் என வித்தியாசமான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காலங்காலமாக தமிழ் வேதங்கள் ஓதி, தமிழ்முறைப்படி நடந்த திருமணங்கள் மறைந்துபோன நிலையில், அதை அரங்கேற்றும் வகையில் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த கவியரசனுக்கும், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த கிருத்திகாவுக்கும் காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
பட்டதாரிகளான மணமக்கள், தமிழ் வேத மந்திரங்களை வாசித்து தங்கள் திருமணத்தை நடத்த விரும்பினர். அதன்படி தமிழ் வேதமந்திரங்கள் கூறி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் தமிழ் பாரம்பரியமான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணம், காரைக்காலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.