கார் ஏற்றி முதியவர்-மருமகனை கொல்ல முயற்சி; 5 பேர் கைது
சிவமொக்கா டவுனில் கார் ஏற்றி முதியவர், அவரது மருமகனை கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்;
சிவமொக்கா: சிவமொக்கா டவுனில் கார் ஏற்றி முதியவர், அவரது மருமகனை கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டு முற்றத்தில் தூங்கியதை...
சிவமொக்கா டவுன் 1-வது வார்டு பொம்மன் கட்டே பகுதியை சேர்ந்தவர் சிவா நாயக். இவர், அதேப்பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சிவா நாயக் வீட்டில் ஒரு அறையில் தூங்கியுள்ளார். கோடை காலம் என்பதால் வீட்டில் புழுக்கமாக இருந்துள்ளது. இதனால் அவர், மகளிடம் கூறிவிட்டு வீட்டு முன்புள்ள முற்றத்தில் பாய் விரித்து கொசு வலைப்போட்டு தூங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக காரில் அதேபகுதியை சேர்ந்த சந்தீப் நாயக், ரவி, சிவா, நாகராஜ், கார்த்திக் ஆகிய 5 பேர் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள், வீட்டு முன்புள்ள முற்றத்தில் பாய் விரித்து தூங்கிய சிவா நாயக்கை கேலி கிண்டல் செய்து திட்டியதாக தெரிகிறது.
கார் ஏற்றி கொல்ல முயற்சி
இதனால் சிவா நாயக், காரை மறித்து அவர்கள் 5 பேருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் 5 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சிவா நாயக்கின் மருமகன் நாகராஜ் 5 பேரையும் தட்டி கேட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த 5 பேரும் சிவா நாயக்கையும், அவரது மருமகனையும் தாக்கியுள்ளனர். மேலும் கார் ஏற்றி 2 பேரையும் கொல்ல முயன்று தப்பி சென்றுள்ளனர்.
5 பேர் கைது
இதுகுறித்து சிவா நாயக்கும், நாகராஜூம் வினோபா நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், வீட்டு முற்றத்தில் தூங்கிய சிவா நாயக்கை கேலி கிண்டல் செய்த தகராறில் அவரையும், அவரது மருமகன் நாகராைஜயும் தாக்கி கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.