போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் ஆத்திரம்... மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொன்ற மருமகன்
திருமங்கலம் அருகே தன்மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் ஆத்திரத்தில் மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மனைவி காளியம்மாள்(வயது 48). இவர்களது மகள் ஜெயா என்ற ஜெயக்கொடி (30). ஜெயாவுக்கும், கூடகோவில் அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி(34) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முனியாண்டி, ஜெயா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் திருமங்கலம் அருகே உள்ள வலையன்குளம் பகுதியில் ஒத்திக்கு வீடு பார்த்துள்ளனர். அதற்கு பணம் கொடுப்பதற்காக மனைவியின் நகைகளை முனியாண்டி அடகு வைத்துள்ளார். ஆனால் அடகு வைத்த நகைகளை முனியாண்டி வங்கியில் இருந்து திருப்பவில்லை. இதுதொடர்பாக ஜெயா கேட்டபோது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுமதுரையில் உள்ள தாயார் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் ஜெயா வந்துவிட்டார்.
மேலும் கணவர் முனியாண்டி மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் வருகிற 10-ந் தேதி போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர்.
தன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் மனைவி ஜெயா மீது முனியாண்டிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கேட்பதற்காக நெடுமதுரையில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்று இரவு முனியாண்டி சென்றார். தன் மீது போலீசில் புகார் செய்தது குறித்து மனைவி மற்றும் மாமியாரிடம் கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி, அரிவாளை எடுத்து மாமியார் காளியம்மாள், மனைவி ஜெயா ஆகியோரை வெட்டினார். இதில் காளியம்மாளுக்கு தலை மற்றும் தாடை பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் முனியாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முனியாண்டிய தேடி வருகின்றனர்.