வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை: அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து விபரீத முடிவா?

திருவேற்காடு அருகே வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்தாரா என விசாரிக்கின்றனர்.

Update: 2022-04-06 22:17 GMT
பூந்தமல்லி,

சென்னை திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 31). பாட்டாளி மக்கள் கட்சியின் திருவேற்காடு அமைப்பு செயலாளராகவும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வக்கீலாகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்க செல்வதாக கூறி வீட்டின் எதிரே உள்ள அவரது குடிசை வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை அவரது தங்கை சென்று பார்த்தபோது, கோபிநாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன கோபிநாத் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அமலாக்கத்துறை அழைப்பு

கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக கூறி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அதை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வக்கீல் கோபிநாத்தின் மூத்த வக்கீலான ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வக்கீல் மோகன்ராஜின் ஜூனியர் தான் இந்த கோபிநாத் என்பதால், விசாரணைக்கு நாளை டெல்லியில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்நிலையில் தான் வக்கீல் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு கோபிநாத் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் வக்கீல் கோபிநாத் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அழைத்த விவகாரத்தில் வக்கீல் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்