சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் கிடையாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2022-04-06 18:58 GMT
சென்னை,

சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் ஏதோ சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. இது எதுவுமே உண்மை கிடையாது. நிர்வாகிகள் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆரோக்கியமான முறையில் இந்த கூட்டம் நடந்து முடிந்தது. வைத்திலிங்கம் தனது சொந்த காரியத்துக்காக கூட்டத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். பின்னர் உடனடியாக மீண்டும் அவர் வந்து விட்டார். இதற்கு உடனே இட்டுக்கட்டி பல்வேறு கதைகளை வெளியிடுகிறார்கள். எதுவுமே உண்மை கிடையாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கட்டுப்பாடு கொண்ட இயக்கம்.

சம்பந்தம் கிடையாது

சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த கட்சிக்கு தொடர்பில்லாத ஒருவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாறுபட்ட கருத்துகளை கூறுவதாக கேட்கிறீர்கள். கட்சி சார்பாக எந்த ஒரு பொதுவான கருத்தையும் நான் கூற முடியும். ஒருவரின் தனிப்பட்ட கருத்துகள் குறித்து நான் எந்த விளக்கமும் அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்