அரசு காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Update: 2022-04-06 17:19 GMT
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். 
திறப்பு விழா
பாகூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு ரூ.67 லட்சம் செலவில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். தீயணைப்புத்துறை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றுப் பேசினார். 
விழாவில் குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
ஊதிய குறைபாடு 
புதுச்சேரியை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றிட, மத்திய அரசுடன் இணைந்து வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கும் போது அந்த கட்டிடங்களில் தீ தடுப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தீ விபத்து ஏற்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
தீயணைப்பு துறை ஊழியர்களின் ஊதியம் தொடர்பான குறைபாடுகள் சரி செய்யப்படும். ஊர்காவல் படையில் 400 பணியிடங்கள் நிரப்பப்படும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 
காலி பணியிடங்கள் நிரப்பப்படும் 
இதேபோல் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 200 பணியிடங்கள் நிரப்பப்படும். இன்னும் 2, 3 மாதங்களில் 700 இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் நிரப்ப, தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
கடந்த பருவமழை வெள்ளத்தால் பாகூர் பகுதி மக்கள் அதிக பாதிப்புக்குள்ளானார்கள். நெல் விவசாயம் முற்றிலும் சேதமானது. இதற்கான நிவாரணம் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கரும்புக்கும் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  
நெருங்கிய தொடர்பு 
புதுச்சேரி மக்களுக்கு தேவையான     அனைத்து உதவிகளும், மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்க காரணமாக இருந்தது பாகூர் மக்கள்தான். அன்று தொடங்கிய ‌எழுச்சியை என்றும் மறக்க முடியாது. பாகூர் மக்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 
விழாவில் அமைச்சர் சாய்.சரவணன் குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தங்க விக்ரமன், கோட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) இளங்கோ, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, பாகூர் நிலைய அதிகாரி பக்கிரி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், தாசில்தார் குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்