முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மாணவர்கள் அமைப்பினர் சந்திப்பு

கியூட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியை மாணவர்கள் அமைப்பினர் சந்தித்து வலியுறுத்தினர்.

Update: 2022-04-06 16:23 GMT
கியூட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியை மாணவர்கள் அமைப்பினர் சந்தித்து வலியுறுத்தினர்.
ரங்கசாமியுடன் சந்திப்பு
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற செயலாளர் எழிலன், இந்திய மாணவர் சங்க செயலாளர் பிரவின்குமார், திராவிடர் மாணவர் கழக தலைவர் மணிபாரதி, மாணவர்கள் கூட்டமைப்பு துணை செயலாளர்கள் செபஸ்டீன், சந்தோஷ் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கியூட் தேர்வு
புதுவை மாநிலத்தில் இந்த கல்வியாண்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இதில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதுவையில் உள்ள கல்லூரிகளை நம்பியே படித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய தேர்வு ஆணையம் 45 மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இளங்கலை கல்வி பயில ‘கியூட்’ என்னும் தேசிய தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளது.
நீட் தேர்வு மூலம் கார்ப்பரேட் குற்றவியல் கல்விக்கூடங்களை அதிகரித்து கொள்ளையடித்து வருகின்றனரோ அதேபோல எதிர்காலத்தில் இளங்கலை கல்வி பெறுவதற்கும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளை நம்பி மாணவர்கள் செல்ல வேண்டிய அவலம் இதன் மூலமாக உருவாகும். மேலும் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்களுக்கு மதிப்பீடு அளிக்க கியூட் தேர்வு மறுக்கிறது. இதனால் மாணவர்கள் 12 ஆண்டுகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே கல்வி பயின்றது வீண்போகும்.
சட்டசபையில் தீர்மானம்
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளும் மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காரணத்தினால் மத்திய பல்கலைக்கழகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறை புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நெருக்கடிகளை உருவாக்கும். எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாநில வழி கல்விக்கு பாதகமான கியூட் தேர்வுக்கு எதிராக புதுவையில் அவசர சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்