விடுதலையான மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை மீட்க முதல்-அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று காரைக்கால் மீனவர்களிடம் அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதியளித்தார்.

Update: 2022-04-06 16:15 GMT
இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலை செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை அமைச்சர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
படகு பறிமுதல்
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது35). இவருக்கு சொந்தமான விசைப்படகில், வீரமணி, செல்வமணி (45), ரமேஷ் (34), சுரேஷ் (34), திலீபன் (17) ஆகிய 5 பேர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
மறுநாள் அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 5 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்து, இலங்கைக்கு கொண்டு சென்றனர். 
காரைக்கால் திரும்பினர் 
இதனைதொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் விடுதலையான மீனவர்களில் 4பேர் நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சென்னை சென்று மீட்டு வந்தனர். மீனவர்களில் திலீபன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் புதுச்சேரி திரும்புவார் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  
ரங்கசாமி நடவடிக்கை எடுப்பார் 
காரைக்கால் திரும்பிய 4 மீனவர்களை புதுவை போக்கு வரத்துதுறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மீனவர்கள், தங்களுடைய வாழ்வாதரமே விசைப்படகுதான். அது இல்லாமல் எங்களால் தொழில் செய்ய முடியாது. எனவே  படகை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
இதனை கேட்ட அமைச்சர் சந்திரபிரியங்கா, முதல்-அமைச்சர் ரங்கசாமி இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். விசைப்படகை மீட்க ரங்கசாமி அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பார் என்றார்.

மேலும் செய்திகள்