திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் - அமைச்சர் துரை முருகன்
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சென்னை,
துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று மீண்டும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வள துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பது என் எண்ணம் என்றும் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பீட்டில் 8 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் கதவணை கட்ட வாங்கிய கடனுக்கு, திமுக ஆட்சியில் வட்டி கட்டி வருகிறோம் என்றும் அதிக வட்டிக்கு கடன் வாங்கியது அதிமுக அரசு தான் என குற்றசாட்டினார்.