முழுமையான தகவல்கள் இல்லையென்றால் சிவில் வழக்குகளை திருப்பி அனுப்பலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

முழுமையான தகவல்கள் இல்லையென்றால் சிவில் வழக்குகளை திருப்பி அனுப்பலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-04-05 21:24 GMT
மதுரை, 

மதுரை ஐகோர்ட்டில் 2-ம் நிலை மேல்முறையீட்டு மனுக்கள் பலவற்றை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் ஏராளமான 2-ம் நிலை மேல்முறையீட்டு வழக்குகளில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் சென்றடைவதில்லை. இதனால் இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. மனுதாரர்கள் சரியான முகவரியை கொடுப்பதில்லை. பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. முழு முகவரியை குறிப்பிடுவதில்லை.

இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. சிவில் வழக்குகளில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களின் சரியான, முழுமையான முகவரி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

அதாவது, முழு முகவரி இடம் பெற வேண்டும். அவ்வாறு இல்லாத சிவில் வழக்குகளை திருப்பி அனுப்பலாம். ஆதார் எண், செல்போன், தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரியையும் சிவில் வழக்குகளில் சேர்க்க வேண்டும். சிவில் வழக்குகளில் இந்த விதியை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து கீழ் கோர்ட்டுகளுக்கும் ஐகோர்ட்டு பதிவுத்துறை உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்