கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் நிதி ஆதாரம் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2022-04-05 18:54 GMT
கோவை,

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், முலாம்பழம், நீர் மோர் உள்ளிட்டவைகளை வழங்கி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையை பொறுத்தவரை முதல்-அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக நிதிகளை வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு நமது மின் தேவை 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின் சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது.  அடுத்த ஆண்டு அனைத்து மின்சார தேவைகளும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும் குடிநீரை பொறுத்த வரை கிடப்பில் போடப்பட்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து சரி செய்து 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்