பொதுப்பணித்துறை ஊழியருக்கு அடி-உதை; 3 பேர் மீது வழக்குப்பதிவு

பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கிய 3 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-04 14:49 GMT
காரைக்கால் திருநள்ளாறு அடுத்த பண்டாரவாடை கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 42). பொதுப்பணித் துறையில் பகுதி நேர ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன், தென்பிடாகை ராஜா (44) என்பவரது வயலுக்கு, முருகானந்தம் வீட்டு வாசல் வழியாக அறுவடை எந்திரம் ஒன்று சென்றுள்ளது. அப்போது, முருகானந்தம் வீட்டு வாசலில் இருந்த முருங்கை மரத்தில் அறுவடை எந்திரம் உரசியதில் மரக்கிளை முறிந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகானந்தம், ராஜாவிடம் போனில் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டுள்ளார். அதற்கு ராஜா முறையான பதில் கூறவில்லையாம். தொடர்ந்து, சேத்தூர் பெட்ரோல் பங்கில் ராஜாவை பார்த்த முருகானந்தம் மீண்டும் மரக்கிளை முறிந்தது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு அவர் முறைத்துகொண்டு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் நேற்று ராஜா, அவரது நண்பர்கள் ராஜசேகர் (42), கார்த்தி (42) ஆகிய 3 பேர், முருகானந்தம் வீட்டுக்கு சென்று அவரை அடித்து, உதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த முருகானந்தம், திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் 3 பேர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்