தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் படங்கள் - இளைஞர்கள் அசத்தல்....!
விராலிமலை அருகே தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து இளைஞர்கள் அசத்தி உள்ளனர்.
விராலிமலை,
திருச்சி மாவட்டம் விராலிமலை ரத்னா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் நேதாஜி (வயது 21). வேதியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் குகன் (21). சிறு வயதிலிருந்தே நண்பர்களான இவர்களுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மற்றவர்கள் வரையும் ஓவியங்களிலிருந்து தாங்கள் வரையும் ஓவியம் தனித்துவம் வாய்ந்ததாகவும், கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.
அதன்படி வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்திலிருந்து தென்னங்கீற்றை பறித்து அதில் தேசிய தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் ஆகியோரது படங்களை தத்ரூபமாக வரைந்து உள்ளனர்.
இவர்களின் இந்த புது முயற்சி பொதுமக்கள் மத்தியில் வியப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.