குன்னூர்: வெலிங்டனில் குதிரை சாகச நிகழ்ச்சி - ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அசத்தல்
வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நடைபெற்ற குதிரை சாகச நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி மற்றும் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் ஆகியவை உள்ளது. இங்குள்ள அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் ராணுவ பயிற்சி மட்டுமின்றி குதிரை ஏற்ற பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி ஜிம்கானா மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி மவுண்டன் ஜிம்கானா என்ற பெயரில் குதிரை சாகச நிகழ்ச்சி ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் 50 ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். குதிரைக்கான ஓட்டப் பந்தயம், ஆசர் லே, ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
சீறி பாய்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஓடிய குதிரைகள் பார்வையாளர்களை கவர்ந்தன. பின்பு நெருப்பு வளையத்திற்குள் குதிரைகள் பாய்வது, குதிரையில் அமர்ந்தபடி ஈட்டி எறிதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் லெப்டினென்ட் ஜெனரல் மோகன் பரிசுகளை வழங்கினார்.