விழுப்புரத்தில் நவீன அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகம் நவீன முறையில் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருங்காட்சியகம் அமைப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் அகிலன், பாரதிதாசன், ஜவகர் ஆகியோர் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தனர். அப்போது விழுப்புரம் மாவட்ட வரலாற்று ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அருங்காட்சியகம் கோரிக்கையை நிறைவேற்றி தந்ததற்கும் விழுப்புரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் அரசாணை வெளியிட்டும் நிதி ஒதுக்கீடு செய்தும் அருங்காட்சியகத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கண்டறிந்து அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியீடு மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பணிகள் விரைவில் தொடங்கப்படும். அருங்காட்சியகங்களை நோக்கி பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அவை நவீனத்துவத்துடன் இருக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சர் அவர்களின் விருப்பம். இதனடிப்படையில் விழுப்புரத்தில் நவீன அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.