கோடைக்காலத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு புதிய திட்டம்
தமிழகத்தில் தினசரி மின்தேவை கோடைக்காலத்தில் 18 ஆயிரம் மெகா வாட் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களுக்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு சுரங்கங்களில் இருந்து 50 ஆயிரம் டன் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இதனால் 2 மாதத்திற்கு தேவையான 5 லட்சம் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இதைத் தவிர தனியார் நிறுவனங்களிடம் இருந்து நடுத்தர கால ஒப்பந்த அடிப்படையில் 650 மெகாவாட் மின்சாரமும், குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் 750 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகத்திடம் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் தினசரி மின்சார தேவை 18 ஆயிரம் மெகா வாட் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த திட்டம் மூலம் அதனை சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.