தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் இன்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை என்று சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
இருப்பினும், பொது மக்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விருப்பத்தின் பேரில் தொடர வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 23 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 275 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து 17-வது நாளாக இன்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.