பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
பெரியார் நினைவு சமத்துவபுரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அதை சீரமைப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஆதிதிராவிட மக்கள் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு சமத்துவமாக ஒரே குடியிருப்பில் அருகருகே ஒற்றுமையாக வாழும் வகையில் தலா 100 வீடுகளைக் கொண்ட சமத்துவபுர திட்டம் தமிழக அரசால் 1997ல் அறிவிக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் 17.8.1998 முதன் முதலாக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உள்ளன. இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பராமரிப்பின்றி உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் எனவும் புதிதாக சமத்துவபுரங்கள் கட்டப்படும் எனவும் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், சமத்துவபுரங்களை சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்களில் 14 ஆயிரத்து 880 வீடுகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பெரியார் சிலை பராமரிப்பு, தெரு விளக்கு, சாலை வசதி, நூலகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சமத்துவபுரங்களில் உட்கட்டமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில், 2008 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு, ஒப்படைக்கப்படாமலும் உள்ளது குறிப்பிடதக்கது.