சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போடுவதா? அண்ணாமலை கண்டனம்
சொத்து வரியை தன்னிச்சையாக தாறுமாறாக உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போடுவதா? என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொத்து வரியை உயர்த்த சொல்லவில்லை
திடீரென்று உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து எழுந்த மக்களின் எதிர்ப்பை கண்டவுடன் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தடாலடியாக சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசு சொல்லித்தான் நாங்கள் வரியை உயர்த்தினோம் என்று பொய்யாக குறிப்பிடுகிறார்.
மத்திய அரசு வழங்கியிருக்கும் ஆணையில் எந்த இடத்திலும் சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை. குறைத்தபட்ச நில அளவைக்கு ஏற்ப வரி விகிதாச்சார அளவுகளை அதில் உள்ள வேறுபாடுகளை குடியிருப்பு வணிக மற்றும் தொழில் சார்ந்த பகுதிகளை பிரித்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களை பதிவு செய்ய வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு மீது பொய் புகார்
சுருக்கமாக சொல்லப்போனால் தாங்கள் விதிக்கும் வரி விகிதாச்சாரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மட்டும்தான் மத்திய அரசு கூறியிருக்கிறதே தவிர 2 மடங்கு உயர்த்துங்கள் 3 மடங்கு உயர்த்துங்கள் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. தாறுமாறாக சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க மனத்துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய்யான புகார் தெரிவித்து நடந்த சம்பவத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.
தாங்கள் (அமைச்சர் கே.என்.நேரு) சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்று நான் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து இருப்பதால் உடனடியாக இந்த கடுமையான சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.