கஞ்சா விற்ற ஓட்டல் ஊழியர் கைது
கஞ்சா விற்ற ஓட்டல் ஊழியர் உள்பட 3 பே்ா கைது
வில்லியனூர்
கஞ்சா விற்ற ஓட்டல் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
வில்லியனூரை அடுத்த உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
ஓட்டல் ஊழியர்
அப்போது சென்னையில் ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணிபுரியும் ஜெகன் (25) என்பவர் தனது பிறந்தநாளை கொண்டாட சொந்த ஊரான உறுவையாறுக்கு வந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடத்தி வந்த கஞ்சா பொட்டலங்களை பரமசிவத்திடம் கொடுத்து விற்பனை செய்ய கூறியது தெரியவந்தது. இதையடுத்து ஜெகனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி கனகன்ஏரியில் கஞ்சா விற்றதாக கவுண்டன்பாளையம் அன்னை தெரசா வீதியை சேர்ந்த மோகன் (26) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 145 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.