ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை தான் - சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-04-02 07:58 GMT
சென்னை,

கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் யாசுதீன் என்பவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2001-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் இருக்கும் காலத்தில் சிறையில் ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டிஐஜி-யை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கிலும் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் பிறந்தநாட்களின் போது ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடிய அரசாணைகளின் கீழ் யாசுதீனையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தாய் ஷெய்தூன் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு விடுத்திருந்தார். அந்த கோரிக்கை மனுவை தமிழக அரசு நிராகரித்தது.

இந்த நிராகரித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷெய்தூன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் உள்ள குற்றவாளி யாசுதீன் ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவரை விடுதலை செய்தால் மத ரீதியிலான பிரச்சினை ஏற்படும். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே யாசுதீனை முன்கூட்டியே விடுதலை செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ என விளக்கம் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ’ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி கவர்னருக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது’ என்றனர். 

மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை ஆயுள் தண்டனை கைதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், விடுதலை செய்தால் மதரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் போன்ற காரணங்களை தீவிரமாக கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுத்துள்ளது. அந்த அரசின் உத்தரவில் தலையிட முடியாது. அந்த உத்தரவில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என கூறி இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 

மேலும் செய்திகள்